ராஜிவ் கொலை வழக்கு – விமர்சனம்
December 25, 2009 in Uncategorized
ஆமாம் லக்கிலுக் சொல்வது போல் கிழக்கிலிருந்து வெளிவரும் அணுகுண்டுதான் இந்த புத்தகம். லக்கிலுக்கின் விமர்சனத்தை படித்து விட்டு கிழக்கு பதிப்பகத்தின் ஆன்லைன் புத்தகக்கடையில் இப்புத்தகத்தை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். வழக்கமாக இரண்டு நாட்களில் வரும் புத்தகம் மூன்று நாட்கள் ஆகியும் வரவில்லை. பதிப்பகத்தில் இருந்து எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த கூரியர் பின் தொடரும் எண்ணைக் கொண்டு இணையத்தில் தேடியபோதுதான் தெரிந்தது புத்தகம் நான் வேலை செய்யும் அலுவலகத்தின் முகப்பு மேசைக்கு வந்துட்டது தெரிந்தது. அங்கிருக்கு அலுவலர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, (கன்னடத்தில்)” ஆவுது சார் நின்னேனே நிம்ம பார்சல் பந்துபிட்டிது, நிமக்கு தெளிசிளிக்கு மறத்துபிட்டிதிவி” (தமிழில்: ஆமாம் சார் உங்க பார்சல் நேற்றே வந்திடுச்சு, உங்களுக்கு தெரிவிக்க மறந்துவிட்டோம்). ஆமாம் இந்த கவனக்குறைவும், செய்யும் வேலையில் சிரத்தை இன்மையும் தான் ஒரு நாட்டின் இரண்டு பிரதமர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் என்கிறார் ராஜிவ் கொலை வழக்கு நூலின் ஆசிரியர் ரகோத்தமன்.
ரகோத்தமன் மற்றும் பல சி.பி.ஐ யின் முன்னாள் அதிகாரிகளின் மனசாட்சிதான் இந்த புத்தகம். ராஜீவ் காந்தி இறந்த தினம் முதல் புத்தகம் பதிப்பான தினம் வரை தினம் வரை ஆசிரியரின் மனசாட்சியை படம் பிடித்து வைக்கிறது இந்த புத்தகம். ராஜீவ் காந்தி கொலை நடந்த பின், சி.பி. ஐக்கு இவ்வழக்கு கைமாறிய போது இருட்டில் குண்டூசியை தேடத் தொடங்கினார்கள் சி. பி. ஐ அலுவலர்கள். ஹரிகுமாரின் கேமராதான் இவ்வழக்கின் Panacea மற்றும் Pandora Box. ஆம் எதிர்பாராத ஹரிகுமாரின் மரணம்தான் இவ்வழக்கின் விதை. புத்தகத்தின் ஏனைய பகுதிகள் இவ்விதை விருட்சமாவதை விவரிக்கின்றது.
மிகவும் குழப்பம் தரக்கூடிய விவரங்களை மிகவும் நேர்த்தியாக தொகுத்து, எதை முதலில் சொல்வது; எதை பின்னால் சொல்வது என்று ஆராய்ந்து அருமையாக தொகுத்துள்ளது “கிழக்கின் கதிர்கள்”. இந்த இடத்தில் பாராவிற்கு பாராட்டுகளை சொல்லியே ஆகவேண்டும். மிகவும் நேர்த்தியாக விவரங்களை கையாளப்பட்டுள்ள இப்புத்தகம் பல கோணங்களில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையானது. மேலும் காதல், ஏமாற்றுதல், துப்பாக்கி சூடு, மேலதிகாரிகளில் அதிகாரம், மேல்மட்ட தலையீடுகள், சி.பி. ஐக்கு முன் “தி ஹிந்து” பத்திரிக்கைக்கு கிடைத்த ஹரிபாபுவின் படங்கள் என்று நம்மூர் கோலிவுட சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை. உலகில் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் ஆசியப்பிராந்தியத்தின் ஒரு பெரிய நாட்டின் உளவுத்துறையில் உள்ள ஓட்டைகளை படம்பிடித்து காட்டுகிறது. மேலும் அதிகாரிகளிடையே உள்ள மெத்தனம், உதாரணமாக துண்டு சீட்டில் எழுதப்பட்டுள்ள மாலை போடுபவர்களின் பெயர்கள், சிவராசனுக்கு தெரிந்த விவரங்கள்கூட தமிழக போலீசுக்கு தெரியாது என பல நக்கல்! விசயங்களும் உண்டு.
உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்பணித்து இந்த வழக்கை துப்புதுலக்கிய பல அதிகாரிகளுள் (முக்கியமாக ஆசிரியர்) பல இடங்களில் தங்களின் கடமைகளை செய்யவிடாமல் தடுக்க காரணமாக இருந்த அரசியல் காரணங்களை புத்தகத்தின் பல இடங்களில் உணரமுடிகிறது. பெங்களூரில் சிவராசன் தன் சகாக்களுடன் இருந்த வீட்டை சுற்றி கருப்பு பூனை படை ஒரு இரவு முழுவதும் (காவல்) காத்துக்கிடந்து, காலையில் தற்கொலை செய்துகொண்ட உடல்களை கைப்பற்றுவது ஒரு பானை சோற்றில் ஒரு சோறு. புத்தகத்தின் பல இடங்களில் புலிகளின் புத்தி கூர்மை, திட்டமிடல், எடுத்துக் கொண்ட காரியத்தில் அவர்களது சிரத்தை மற்றும் தலைமையிடத்தில் விசுவாசம் போன்றவற்றை புகழவும் ஆசிரியர் தயங்கவில்லை. கிழக்கு வெளியிடும் புத்தகங்களில் (நான் படித்ததில், ஒரு 20 இருக்கும்) இது வித்தியாசமான புத்தகம், ஏனெனில் படங்கள் புத்தகத்தின் ஆங்காங்கே வந்து படிப்பதை முழுமையாக்குகிறது. கிழக்கு புத்தகங்களில் பலவற்றிலும் நிகழும் படங்களை தேடி ஏமாற்றம் அடைதல் இப்புத்தகத்தில் இல்லை. ஒருவருக்கே பல பெயர்கள் இருப்பதாலும், ஒரே அத்தியாயத்தில் பல பெயர்கள் வருவதாலும் நபர்களை அடையாளப்படுத்துவதில் உள்ள குழப்பம் புத்தகத்தில் கடைசியில் உள்ள படங்களால் தவிர்க்கப்பட்டுள்ளது, ஆனாலும் “அகிலா” யாரென்றே புலப்படவில்லை. சுபாவும், தானுவும் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள் என்று மட்டும் தெரிகிறது.
வேதாரண்யத்தில் நடந்தது தற்கொலைதான் என்றும் சி. பி. ஐ சண்முகத்தை அடித்து கொலை செய்யவில்லை என்று கூறி சி. பி. ஐன் மேல் உள்ள அவப்பெயரை துடைக்க நினைக்கும் ஆசிரியர், மல்லிகையில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்களைப் பற்றி ஏதும் கூறமுயலவில்லை. அவரது கருத்தை படிக்கும் போது மல்லிகை ஒரு அமைதிப்பூங்கா போல காட்சியளிக்கிறது! அதே போல் சி. பி. ஐயால் குற்றம்சாட்டப்பட்ட சிலரை நீதிமன்றம் விடுதலை செய்ததும் ஏன் என்று தெரியவில்லை. ஹைதராப்பாத்தில் இருந்து ராஜீவ் காந்தியுடன் வந்த வெளிநாட்டு நிருபர்களை பற்றி பல குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதைபற்றி ரகோத்தமன் கூறவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கப் இப்புத்தகம் முயற்சிசெய்தாலும் பல முடிச்சுகள் (பக சிக்கல்களுடன்) இன்னும் அரதபழசாக அப்படியே இருப்பதாக தோன்றுகிறது. இப்படி பல விசயங்கள் தொடப்படாமல் இருந்தாலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கை பற்றி ஏற்கனவே வந்துள்ள புத்தகங்களைவிட (ஆங்கில மற்றும் தமிழ்) பல்வேறு வகைகளில் வேறுபட்டு இருக்கும் இப்புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் – விலை : ரூ.100 – நூலாசிரியர் : ரகோத்தமன்
Your IP Address is:
38.107.179.210
